NATIONAL

மாநிலத் தேர்தலில் வெல்ல ஹராப்பான், பாரிசானுக்கு வலுவான வியூகமும் அடிமட்ட ஆதரவும் அவசியம்- பிரதமர் வலியுறுத்து

பெர்மாத்தாங் பாவ், ஜூலை 17- ஆறு மாநிலங்களில் விரைவில்
நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற பக்கத்தான் ஹராப்பான்
மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு வலுவான வியூகமும்
ஒருங்கிணைந்த அடிமட்ட ஆதரவும் இருப்பது அவசியம் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இத்தேர்தல்களில் சிறப்பான வெற்றியைப் பெறுவதற்கு அவ்விரு அரசியல்
கூட்டணிகளும் தங்கள் வளங்களை முழுமையாக களமிறக்க வேண்டும்
என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதுவே எனது கருத்து. அம்னோவுக்குக் கிராமங்களில் வலுவானத் தளம்
உள்ளது. ஜசெக நகர்ப்புறங்களில் செல்வாக்கு பெற்றுள்ளது. கெஅடிலான்
கட்சிக்கு இவ்விரு இடங்களிலும் ஆதரவு உள்ளது. ஹராப்பான் மற்றும்
பாரிசான் கூட்டணிகளுக்கு வலுவான வியூகமும் அடிமட்டத்தின்
ஒருங்கிணைந்த ஆதரவும் இருப்பது அவசியமாகும் என அவர்
தெரிவித்தார்.

யாராலும் நம்மை அசைத்துப் பார்க்க முடியாது. நம்புங்கள், யாராலும்
நம்மை அசைத்துப் பார்க்க முடியாது என இங்குள்ள செபராங் ஜெயா
கண்காட்சி மையத்தில் மடாணி ஒற்றுமை பேரணி மற்றும் மடாணி
ஒற்றுமை தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில்
அவர் சொன்னார்.

பினாங்கில் தனித்துவமிக்க முடிவுகளைப் பெறுவதன் மூலம் ஹராப்பான்-
பாரிசான் கூட்டணி இம்முறை வரலாறு படைக்கும் என்று கெஅடிலான்
கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஆளும் கட்சியாக
இருந்த ஹராப்பானும் எதிர்க்கட்சியாக இருந்த பாரிசானும் கரம் கோர்த்து
ஓரே அணியில் களம் காண்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :