NATIONAL

வெற்றியை ஈட்ட தனி முத்திரையை உருவாக்குங்கள்- மகளிருக்குத் துணையமைச்சர் சரஸ்வதி கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 17- மகளிர் தங்கள் நிபுணத்துவத்தை
உறுதிப்படுத்துவதற்கும் குரலை வலுப்படுத்துவதற்கும் தாங்கள் சார்ந்த
துறைகளில் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக
திடமான தனித்துவ முத்திரையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.

தனித்துவமிக்க முத்திரையின் மூலம் மகளிர் தடைகளைத்
தகர்த்தெறியவும் ஒரே பாணியிலான சவால்களைத் சமாளிக்கவும்
மற்றவர்களும் தங்களைப் பின்பற்றுவதற்குத் தூண்டுக்கோலாக விளங்கவும்
இயலும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்
துறை துணையமைச்சர் கே. சரஸ்வதி கூறினார்.

விரைவான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில்
தனிப்பட்ட முத்திரை முக்கிய அம்சமாக விளங்குகிறது என்றும் அவர்
குறிப்பிட்டார்.

நமது தனித்துவமிக்க அடையாளத்தை வடிவமைக்கும் மற்றும் வழங்கும்
கலையாக இது விளங்குகிறது. இந்த சக்திவாய்ந்த ஆயுதம் நாம் நிமிர்ந்து
நிற்பதற்கும் விளைவுகளை ஏற்படுத்துவதற்கும் வெற்றிகளை
ஈட்டுவதற்கும் உதவுகிறது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள ராஜா துன் ஊடா நூலகத்தில் நடைபெற்ற எஸ். ஷாலினி
எழுதிய தனி நபர் முதல் முத்திரை வரை- நிபுணர்களுக்கான தனிப்பட்ட
முத்திரை வழிகாட்டி எனும் நூலின் வெளியீட்டு விழாவுக்குத்
தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளரும் சமூக ஊடகம் சார்ந்த
தொழில்முனைவோர் என்ற முறையில் இண்ட்ஸடாகிராமில்
லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்டவருமான டத்தின் விவி சோபினாஸ் யூசுப்பின் வெற்றியையும் சரஸ்வதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


Pengarang :