NATIONAL

எம்.எச்.17 – உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் கடப்பாட்டை மலேசியா உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், ஜூலை 17- மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச்
சொந்தமான எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டச் சம்பவத்தின்
பின்னணியில் உள்ள உண்மை, நீதி மற்றும் பொறுப்பானவர்களைக்
கண்டறிவதில் தனக்குள்ள கடப்பாட்டை மலேசியா உறுதிப்படுத்தியது.

மோதலில் தொடர்புடைய தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு
தீர்வு காண்பது தொடர்பான விசாரணையைத் தொடர்வது என கடந்த
மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக சிவில் வான் போக்குவரத்து
நிறுவனத்தின் 228வது கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகப் போக்குவரத்து
அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு ஒன்பது ஆண்டுகள்
நிறைவடைவதையொட்டி அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பில் நெதர்லாந்தின் தி
ஹேக் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த 2022ஆம்
ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த பேரிடர் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதிலும் உயிரிழந்த 43
மலேசியர்கள் உள்பட 298 விமானப் பயணிகளின் குடும்பத்தினருக்கு நீதி
கிடைப்பதிலும் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக இந்த தீர்ப்பு
அமைந்துள்ளது.

எனினும், இந்த தீர்ப்பு நீதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ப்படும்
தொடர் முயற்சிகளுக்கு ஒருபோதும் முற்றுப் புள்ளி வைக்காது என அந்த
அறிக்கை கூறியது.

இந்த விமானப் பேரிடரில் உயிரிழந்த அனைத்துப பயணிகளின்
குடும்பத்தினருக்கும் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்
கொள்வதாகப் போக்கு வரத்து அமைச்சு தெரிவித்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி
வந்து கொண்டிருந்த அந்த போயிங் 777 ரக விமானம் உக்ரேனின் கிழக்கு
பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் விமானத்திலிருந்த
அனைத்து 298 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களும்
உயிரிழந்தனர்.


Pengarang :