NATIONAL

11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு- பேராளர்கள் எண்ணிக்கை 1,000ஆக உயர்வு- அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கோலாலம்பூர்,ஜூலை 17-
மலேசியாவில் நடைபெறும் 11ஆவது
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு
பேராளர்கள் வழங்கி வரும் ஆதரவு பெரும்
மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மனிதவள
அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு
தலைவருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.

கடந்த வாரம் வரை மாநாட்டிற்கு வருகை
தரும் பேராளர்கள் எண்ணிக்கை 700 ஆக
இருந்தது.

இப்போது ஒரே வாரத்தில் 300 பேராளர்கள்
பதிந்து கொண்டுள்ள வேளையில்
ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேராளர்கள்
மாநாட்டில் கலந்து கொள்வது பெரும்
உற்சாகத்தை அளிக்கிறது என்று அவர்
சொன்னார்.

கோலாலம்பூரில் உள்ள மலாயா
பல்கலைக்கழகத்தில் ஜூலை 21 முதல் 23
வரை உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மிகப்
பெரிய அளவில் நடைபெறுகிறது.

நீண்ட நெடிய வரலாறு மற்றும் வளமான
இலக்கியம் கொண்ட பழமையான
மொழிகளில் ஒன்றாக விளங்கும்
தமிழ்மொழி எதிர்நோக்கும் சவால்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு
நடத்தப்படுகிறது.

இதற்கு முன்னர் 1966, 1987 மற்றும் 2015
ஆம் ஆண்டுகளில் மூன்று முறை உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசிய ஏற்று
நடத்தியுள்ளது.

இப்போது 4 ஆவது முறையாக உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், ஓம்ஸ்
அறக்கட்டளையுடன் இணைந்து மலாயா
பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை
இணைந்து நடத்துகிறது.

இந்த மாநாட்டை மாபெரும் அளவில்
வெற்றியடைய தேவையான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பா,
ஹாங்காங், மொரிஷியஸ், சிங்கப்பூர்,
இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து
மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில்
இருந்து சுமார் 1,000 பேராளர்கள்
2,000க்கும் மேற்பட்ட அறிஞர்கள்,
கவிஞர்கள் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில்
கலந்து கொள்வது பெருமையளிக்கிறது
என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :