NATIONAL

கெடா மந்திரி புசார் சனுசிக்கு எதிராக இரு நிந்தனைக் குற்றச்சாட்டுகள்

செலாயாங், ஜூலை 18- அரச அமைப்புக்கு எதிராக வெளியிட்டதாக
கூறப்படும் கருத்துகள் தொடர்பில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ
முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக இரு நிந்தனைக்
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதிகள் நோர் ரஜியா மாட் ஜின் மற்றும் ஓஸ்மான் அஃபெண்டி சாலே
முன்னிலையில் தனித்தனியே கொண்டு வரப்பட்ட இரு
குற்றச்சாட்டுகளையும் சனுசி மறுத்து விசாரணை கோரினார்.

இவ்விரு குற்றச்சாட்டுகளும் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)(ஏ)
பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்பிரிவுகளின் கீழ் குற்றவாளி
என நிரூபிக்கப்படுவோருக்கு மூன்றாண்டு வரையிலான சிறைத்தண்டனை,
5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே
விதிக்கப்படலாம்.

கடந்த 11ஆம் தேதி கோம்பாக், கம்போங் பெண்டஹாராவில் ஆற்றிய
உரையில் சிலாங்கூர் மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியை
நியமனம் செய்த விவகாரத்தில் கெடா சுல்தானை ஒப்பிட்டு சிலாங்கூர்
சுல்தானை அவமதிக்கும் வகையில் சனுசி பேசியதாக கூறப்படுகிறது.

கெடா சுல்தானாக இருந்தால் அமிருடினை ஒருபோதும் மாநில மந்திரி
புசாராக நியமித்திருக்க மாட்டார் என்று பெரிக்கத்தான் நேஷனல் தேர்தல்
தலைமை இயக்குநருமான சனுசி தனது உரையில் கூறியுள்ளார்.

சனுசியை 5,000 வெள்ளி ஜாமீன் தொகையில் விடுவிக்க அனுமதி
வழங்கிய நீதிபதி ரஜியா, இவ்வழக்கின் மறு விசாரணையை வரும்
அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதனிடையே, மற்றொரு நீதிமன்றத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம்
நடைபெற்ற 15வது பொதுத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஒற்றுமை
அரசாங்கத்தை அமைக்க மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்
அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா உத்தரவிட்டது

உண்மையா என கேள்வியெழுப்பியது தொடர்பில் சனுசிக்கு எதிராக
இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இக்குற்றசாட்டை சனுசி மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து
நீதிபதி ஓஸ்மான் அவரை 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவித்ததோடு
விசாரணையை வரும் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு தொடர்பில் பொது இடங்களில் கருத்து தெரிவிப்பதற்கும்
சனுசிக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.


Pengarang :