NATIONAL

வெ. 15 லட்சம் செலவில் கோல குபு பாரு பொது சந்தை மறுசீரமைப்பு

ஷா ஆலம், ஜூலை 18- வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின்
வசதிக்காகக் கோல குபு பாரு பொது சந்தையை 15 லட்சம் வெள்ளி
செலவில் தரம் உயர்த்தும் பணியை கோல குபு பாரு சட்ட மன்றத்
தொகுதி மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அந்த மார்க்கெட்டில் எந்தவொரு சீரமைப்பு
பணியும் மேற்கொள்ளப்படாததை கருத்தில் கொண்டு இந்த திட்டம்
முன்னெடுக்கப்படுள்ளதாக தொகுதியின் முன்னாள் உறுப்பினரான லீ கீ
ஹியோங் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மாநில அரசு ஒதுக்கீடு செய்த நிதியைக்
கொண்டு இந்த சீரமைப்பு பணியை மேற்கொள்கிறோம். பறவைகளின்
எச்சத்தால் அந்த மார்க்கெட் அசுத்தமடைவதைக் கருத்தில் கொண்டு
பறவைகள் நுழையாவண்ணம் கூரைகளை வடிவமைக்கும் பணி
மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக
இங்குள்ள கடைகளும் புதிய வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன.
தங்கள் வியாபாரப் பொருள்களை வைப்பதற்கு நாற்காலி மற்றும்
மேசைகளை அவர்கள் இனியும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
என்றார் அவர்.

இந்த பொது சந்தை எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யும்
நோக்கில் அதனை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும்
அவர் குறிப்பிட்டார்.

இது தவிர பி.எஸ்.பி. எனப்படும சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ்
ஒதுக்கப்பட்ட 500,000 வெள்ளி நிதியைக் கொண்டு இத்தொகுதியில் 19
அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும்
அவர் தெரிவித்தார்.


Pengarang :