NATIONAL

சாலை சீரமைப்புப் பணி தீவிரம்- ரவாங்கில் மேலும் ஒரு சாலை செப்பனிடப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 18- இவ்வாண்டு மே மாதம் முதல் இன்ஃபராசெல்
சென். பெர்ஹாட் நிறுவனத்தால் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு
வரும் சாலை சீரமைப்பு பணிகள் இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி
கோம்பாக் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜாலான் தாசேக் புத்ரி, பண்டார் தாசேக் புத்ரி, ரவாங் ஆகிய பகுதிகளில்
சாலையின் மேற்பரப்பை அகற்றி விட்டு புதிதாக சாலையை செப்பனிடும்
பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில அரசின் அந்த சாலை
பராமரிப்பு நிறுவனம் கூறியது.

புதிதாக போடப்பட்ட சாலைகளில் கோடுகளை இடும் பணி
மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அதனை
பயன்படுத்தலாம் என்று இன்ஃப்ராசெல் நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில்
தெரிவித்தது.

பொது மக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் இந்த பராமரிப்புப்
பணிகள் மூலம் மக்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும்
அது மேலும் குறிப்பிட்டது.

மாநிலம் முழுவதும் பழுதடைந்த நிலையிலுள்ள 94.9 கிலோ மீட்டர் நீள
சாலைகளை சீரமைக்கும் பணி கடந்த மே தொடங்கி மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இஷாம் ஹஷிம் கூறியிருந்தார்.

ஊராட்சி மன்றங்கள், பொதுப்பணித் துறை, வடிகால் மற்றும் நீர்பாசனத்
துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் அதிகாரத்திற்குட்பட்ட 118
சாலைகள் இத்திட்டத்தின் கீழ் செப்பனிடப்படுவதாக அவர்
தெரிவித்திருந்தார்.


Pengarang :