NATIONAL

பிரதமரின் தலைமைத்துவம் மீது 73.4 விழுக்காட்டு சிலாங்கூர் வாக்காளர்கள் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 21- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமைத்துவம் மீது சிலாங்கூரைச் சேர்ந்த 73.4 விழுக்காட்டு
வாக்காளர்கள் நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதை
டாருள் ஏசான் கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவு காட்டுகிறது.

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலாங்கூர்
மாநிலத் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணவோட்டம் தொடர்பில்
நடத்தப்பட்ட ஆய்வில் இந்த கருத்து பெறப்பட்டதாக டாருள் ஏசான்
கழகத்தின் நிர்வாகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகமது ரெட்சுவான்
ஓத்மான் கூறினார்.

இந்த ஆய்வில் பங்கு கொண்டவர்களில் 26.3 விழுக்காட்டினர் மலேசியா
மடாணி கோட்பாட்டின் வழி நாட்டிற்குச் சிறப்பான எதிர்காலத்தை
ஏற்படுத்தும் தலைவராக அன்வாரைக் கருதுகின்றனர் என்று அவர்
சொன்னார்.

நாட்டிலுள்ள பல்லின மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல் உள்ள
தலைவராக அவரை 16.19 விழுக்காட்டினரும் அதிகாரத் துஷ்பிரயோகம்
மற்றும் ஊழலை ஒழிக்கும் தலைவராக 16.1 விழுக்காட்டினரும்
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் தலைவராக 14.1
விழுக்காட்டினரும் கருதுகின்றனர் என்று முகமது ரெட்சுவான்
தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 12 முதல் 15ஆம் தேதி வரை மாநிலத்திலுள்ள
அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்ந்த 1,693 பேரிடம் இந்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் 18.7 விழுக்காட்டினர் பக்கத்தான் ஹராப்பான்
கூட்டணியின் தலைவருமான அன்வார் மீது எதிர்மறையான
கண்ணோட்டதைக் கொண்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்ய முடியாதது, மலாய் மற்றும் இஸ்லாத்தின் நலனைக் காக்கத் தவறியது ஆகியவை அவருக்கு எதிரான எதிர்மறையான கருத்துகளாகும் என்றார் அவர்.


Pengarang :