NATIONAL

கிளந்தானை காப்பாற்ற உதவுங்கள்- ஒற்றுமை அரசுக்கு வாக்களியுங்கள்- அன்வார் கோரிக்கை

மச்சாங், ஜூலை 24 – எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான்நேஷனல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் கிளந்தான் மாநிலத்தை அபிவிருத்தி செய்வதில் ஒற்றுமை அரசாங்கம் உறுதியாக உள்ளது.

மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

மக்கள் எழுச்சி பெறவும் ஒற்றுமை அரசாங்கத்தின் சேவைகள் மற்றும் முடிவுகள்
மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவும் வேண்டிய தருணம் இது என்று அவர் சொன்னார்.

கிளந்தான் நிலைமையை புரிந்துகொண்டு மாநிலம் மற்றும் மலேசியாவைக் காப்பாற்ற உதவுமாறு நான் கிளந்தான் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், மலாய்க்காரர்களின் அவல நிலையை எண்ணி, கிராமப்புற மக்கள் மற்றும்
நகர்ப்புற ஏழைகளைக் கவனித்து இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட இது
எங்களுக்கு ஒரு வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.

நேற்றிரவு புக்கிட் தியூவில் கிளந்தான் மாநில நிலையிலான மடாணி ஒற்றுமைப் பயணம் மற்றும் தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாரிசான் நேசனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடியும் கலந்து கொண்டார்.

அன்வாரின் கருத்தை தமது உரையில் எதிரொலித்த அம்னோ தலைவரான
ஜாஹிட், ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் கட்சிகளுக்கு மாநிலத்தை ஆள வாய்ப்பு அளிக்குமாறு மாநில மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அனைத்து வேட்பாளர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். பக்காத்தான் ஹராப்பான்
மற்றும் பாரிசான் நேஷனலைப் பிரதிநிதிக்கும் வேட்பாளர்களை இந்த முறை
மாநிலத் தேர்தலில் வெற்றி பெற வைப்பதன் மூலம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு
மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை வழங்கும்படி கிளந்தான்
மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார அவர்.

நாங்கள் வெற்றி பெற்றால் அனைவருக்கும் நியாயமாக நடப்போம். தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று அவர் கூறினார்.


Pengarang :