SELANGOR

பெர்மாத்தாங் சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் சுங்கை யூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் துப்புரவு இயக்கம்

தஞ்சோங் காராங், ஜூலை 28- இங்குள்ள கம்போங் சுங்கை யூ இந்திய
கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்
துப்புரவுப் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

ஆலய நிர்வாகத்தினர், சுற்றுவட்டார பொது மக்கள் மற்றும் பக்தர்களின்
ஆதரவுடன் பெர்மாத்தாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர்
கே.பத்மநாபன் ஏற்பாடு செய்திருந்த இந்த துப்புரவு இயக்கத்தில்
நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 9ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
நடைபெற்ற இந்த துப்புரவு இயக்கத்தின் போது ஆலயத்திற்கு வர்ணம்
பூசுவது, புதர்கள் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்வது, குப்பைகளை
அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன்
மேற்கொள்ளப்பட்டதாக பெர்மாத்தாங் தொகுதி இந்திய சமூகத் தலைவர்
கே.பத்மநாபன் கூறினார்.

இந்த துப்புரவு இயக்கத்திற்கு உண்டான மண்வாரி இயந்திர வாடகை,
உணவு போன்ற அடிப்படை செலவுகளை இந்தியச் சமூகத் தலைவருக்கான
மானியத்திலிருந்து தாம் ஈடு செய்த வேளையில் ஆலயத்தில் வர்ணம்
பூசுவதற்கு தேவையான சாய டின்களை பக்தர்களும் துப்புரவு
உபகரணங்களை ஆலய நிர்வாகத்தினரும் வழங்கினர் என்றார் அவர்.

பொலிவிழந்து காணப்பட்ட இந்த ஆலயம் கிராம மக்கள் ஒன்று பட்டு
மேற்கொண்ட இந்த துப்புரவுப் பணியின் வாயிலாக இப்போது
சுத்தமாகவும் பளிச்சென்ற தோற்றத்திலும் காட்சியளிக்கிறது . இது
போன்ற துப்புரவுப் பணிகளை அவ்வப்போது மேற்கொள்ளவும் நாங்கள்
தயாராக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :