NATIONAL

அவதூறான அறிக்கை- சனுசிக்கு எதிராக அன்வார் தடையுத்தரவு பெற்றார்

கோலாலம்பூர், ஜூலை 31- சமூக ஊடங்கள், இணையத்தளம் மற்றும் இதர
ஊடகங்கள் வாயிலாக பிரதமருக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை
வெளியிடுவதிலிருந்து கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ சனுசி முகமது
நோருக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அலோர்ஸ்டார்
உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற வழக்கின் போது பக்கத்தான் ஹராப்பான்
தலைவருமான அன்வார் தாக்கல் செய்த ஒருதலைச்சார்பு மனுவை
நீதிபதி மஹாஸான் மாட் தாயிப் ஏற்றுக் கொண்டதாக அவரின்
வழக்கறிஞர் எஸ்.என். நாயர் கூறினார்.

அன்வாருக்கு எதிராக நேரடியாகவே மறைமுகமாகவோ சமூக ஊடகங்கள்,
இணையத்தளங்கள் அல்லது இதர ஊடகங்கள் வாயிலாக அவதூறான
கருத்துகளை பிரதிவாதி (முகமது சனுசி), அவரின் பணியாளர்கள் அல்லது
ஏஜெண்டுகள் வெளியிடுவதை தடுக்கும் நோக்கில் இந்த இடைக்காலத்
தடையுத்தரவு பெறப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த உத்தரவைப் பெற்ற கணம் முதல் பிரதிவாதி நீதிமன்ற உத்தரவை
மதித்து நடக்க வேண்டும் என்று நாயர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
கடந்தாண்டு தம்புனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது சனுசி
நிகழ்த்திய உரைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மானநஷ்ட வழக்கில்
இந்த இடைக்கால உத்தரவை 75 வயதான அன்வார் பெற்றுள்ளார்.

இந்த வழக்கிற்கான தேதியை நீதிமன்றம் நிர்ணயிப்பதற்காக தாங்கள்
காத்திருப்பதாகக் கூறிய நாயர், அன்வார் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பில்
அவதூறு பரப்பும் வகையிலான அதே கருத்தை சனுசி கடந்த மார்ச் 18ஆம்
தேதி நெகிரி செம்பிலான நீலாயிலும் ஜூலை 11ஆம் தேதி சிலாங்கூர்
மாநிலத்தின் செலாயாங்கிலும் மறுபடியும் வெளியிட்டதாகச் சொன்னார்.

இந்த நீதிமன்றத் தடையுத்தரவு முகமது சனுசியின் வழக்கறிஞரிடம்
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும்
சொன்னார்.


Pengarang :