SELANGOR

புக்கிட் கெமுனிங் சாலையில் கால்வாய் விரிவாக்கத் திட்டம் தொடரப்படுவதை பிரகாஷ் உறுதி செய்வார்- கணபதிராவ்

ஷா ஆலம், ஆக 1- இங்குள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங் 8வது மைல்
பகுதியில் கால்வாய்களை விரிவாக்கம் செய்வதற்கு
முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படுவதை
கோத்தா கெமுனிங் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்
பிரகாஷ் சாம்புநாதன் தொடர்வார் என்று அத்தொகுதியின் முன்னாள்
சட்டமன்ற உறுப்பிரான வீ. கணபதிராவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

துடிப்புமிக்க மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட வேட்பாளராக
விளங்கும் பிரகாஷ் வரும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில்
இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றம் காண்பதை உறுதி செய்வார்
என அவர் சொன்னார்.

புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சனை மற்றும் தூய்மைக்
கேட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் இந்த இச்சாலையின் இரு
மருங்கிலும் உள்ள கால்வாய்களை விரிவுபடுத்துவதற்கு கடந்த
தவணையின் போது தாம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்ததாக அவர்
குறிப்பிட்டார்.

அந்த முயற்சியின் பயனாக இந்த கால்வாய் விரிவாக்கத் திட்டத்திற்கு
மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை கடந்தாண்டு ஒப்புதல்
அளித்தது. பிரகாஷ் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் பட்சத்தில்
அவர் இத்திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை உறுதி செய்வார் என்றார்
அவர்.

நேற்று, கோத்தா கெமுனிங் வேட்பாளர் பிரகாஷூடன் புக்கிட் கெமுனிங்
சாலையிலுள்ள கால்வாய்களை கணபதிராவ் பார்வையிட்டார். ஷா ஆலம்
மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜனும் அப்போது உடனிருந்தார்.

எதிர்வரும் 12ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான்
ஹராப்பான் கூட்டணி சார்பில் பிரகாஷ் கோத்தா கெமுனிங் தொகுதியில் போட்டியிடுகிறார். பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் சியு ஜி காங்கும்
பார்ட்டி ராக்யாட் மலேசியா சார்பில் கே. குணசேகரனும்
போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் மொத்தம் 81,946 வாக்காளர்கள்
உள்ளனர்.


Pengarang :