NATIONAL

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா, மலேசியா உறுதி

ஜோர்ஜ் டவுன் ஆக 12 –  மலேசியாவிற்கு வருகை தந்திருக்கும் சீன வெளியுறவு அமைச்சர்
வாங் யீயை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பும் பல்வேறு
துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதியளித்ததாக சின்ஹுவா நிறுவனம்
செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தாம் மேற்கொண்ட வெற்றிகரமான சீன விஜயத்தை நினைவுகூர்ந்த அன்வார், சீனா மலேசியாவின் நம்பகமான மற்றும் நல்ல நண்பர் என்றும், இரு நாடுகளும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்புடன் சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.

இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய ஒருமித்த கருத்தை இரு தரப்பினரும்
தீவிரமாக செயல்படுத்தி பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும்
சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று
பிரதமர் கூறினார்.

மலேசியாவில் முதலீட்டை விரிவுபடுத்த சீன நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன. பரஸ்பர நன்மை மற்றும் சாதகமான முடிவுகளை அடைய பல்வேறு துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா தயாராக உள்ளது என்றும் அவர்
தெரிவித்தார்.

அன்வாரை சீன மக்களின் பழைய நண்பர் என்று வர்ணித்த சீன கம்யூனிஸ்ட்
கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினருமான வாங், இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியான பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

சீனா மற்றும் மலேசியா ஆகிய இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான வளர்ச்சிக்
கருத்துகள் மற்றும் பரந்த பொது நலன்களைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்தர ஒத்துழைப்பு பயனுள்ள முடிவுகளைத் தந்துள்ளது
என்று வாங் கூறினார்.


Pengarang :