மாநிலத் தேர்தல் முடிவுகளை ஒற்றுமை அரசு மதிக்கிறது- மேலும் கடுமையாக உழைக்கத் தயார்- பிரதமர் சூளுரை

கோலாலம்பூர், ஆக 13- ஆறு மாநிலத் தேர்தல் மற்றும் கோல திரங்கானு
நாடாளுமன்ற இடைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் மக்களின்
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் கடுமையாக உழைக்க
ஒற்றுமை அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளது.

மலேசியா மடாணி மேம்பாடு மற்றும் மடாணி பொருளாதாரக்
கொள்கைக்கு ஏற்ப தனது தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து
வலுவுடன் செயல்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

மலேசியா பெருமைப்படத்தக்க வெற்றியைப் பெறுவதை உறுதி
செய்வதற்காக திங்கள்கிழமை தொடங்கி நாம் வழக்கம் போல் அல்லாமல்
மேலும் கடுமையாக உழைப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள்
தொடர்பான அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

அதே சமயம் கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில்
பெரிக்கத்தான் நேஷனல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும்
வகையிலான தேர்தல் முடிவுகளை தாம் மதிப்பதாகவும் அவர் சொன்னார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கில் ஒற்றுமை அரசாங்கம்
ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதற்குக் கூட்டணிக் கட்சிகளின்
கருத்திணக்கம் மற்றும் சபா, சரவா மாநிலக் கட்சிகள் வழங்கிய ஆதரவே
காரணம் என்றும் அன்வார் கூறினார்.

இந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயக நடைமுறையின் படி மக்கள் எடுத்த
முடிவாகும் எனக் கூறிய அவர், இந்த முடிவை மதிக்கும்
அதேவேளையில் அதனை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும் என்றார்.

பிரச்சனை அல்லது ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்தின்
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி அதற்கான மனுவை
முன்வைக்கலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :