SELANGOR

ஆறு வட்டாரங்களில் நீர் விநியோகம் இன்று வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், ஆக 13- நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களிலிருந்து
அனுப்பப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் விநியோகம் குறைக்கப்பட்டதால்
ஆறு பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று காலை 8.30
மணிக்கு முழுமையாகச் சீரடைந்தது.

நீர் விநியோக முறை இன்று நண்பகல் 12.00 மணிக்கு
நிலைப்படுத்தப்பட்டவுடன் நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க
நிலைக்குத் திரும்பும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
பயனீட்டாளர்களின் இருப்பிடம் மற்றும் தொலைவு ஆகியவற்றைப்
பொறுத்து நீர் விநியோக நேரம் இடத்திற்கு இடம் மாறுபடும் என்று
அந்நிறுவனம் தெரிவித்தது.

லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகக்
கூறிய அந்நிறுவனம், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான
மருத்துவமனைகள், கிளினிக்குகள், டயாலிசிஸ் மையங்கள் மற்றும்
நல்லடக்கச் சடங்கு நடைபெறும் இடங்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும் எனக் குறிப்பிட்ட்டது.

பொது மக்கள் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட இடங்கள் பற்றிய
விபரங்களை https://hentitugas.airselangor.com/ எனும் அகப்பக்கம் அல்லது
செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

காட்டாற்று வெள்ளம் காரணமாக நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு செல்லும்
நீர் கலங்கிய நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து ரந்தாவ் பாஞ்சாங்,
சுங்கை சிலாங்கூர் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம்
கட்ட நீர் சுத்திகரிப்பு மையங்கள் நேற்று மூடப்பட்டன.

இதன் காரணமாக பெட்டாலிங், கோலாலம்பூர், கோம்பாக், ஷா ஆலம்,
கிள்ளான், கோல சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை
ஏற்பட்டது.


Pengarang :