NATIONAL

குவா மூசாங்- லோஜிங் சாலையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் பலி

குவா முசாங், ஆக 13- இங்குள்ள குவா
முசாங்-லோஜிங் சாலையின் 73வது
கிலோ மீட்டரில் நேற்றிரவு நிகழ்ந்த
சாலை விபத்தில் தாயும் மகளும்
பரிதாபமாக உயிரிழந்தனர்.

நள்ளிரவு 12.09 மணியளவில் நிகழ்ந்த
இச்சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற
நார்மண்டியா தாஹா (வயது 45) மற்றும்
அவரது தாயார் பாத்திமா சைட் (வயது 67) ஆகிய
இருவரும் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர்.

சம்பந்தப்பட்ட வாகனம் கட்டுப்பாட்டை
இழந்த காரணத்தால் இந்த விபத்து
ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று
குவா முசாங் மாவட்ட காவல்துறைத்
தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ
கூறினார்.

அவ்விருவரும் பேராக்கின்
ஈப்போவிலிருந்து கோல திரங்கானு
நோக்கிப் பயணம் செய்தபோது
இவ்விபத்து நிகழ்ந்துள்ளது தொடக்கக்
கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது
என்று அவர் சொன்னார்.

அந்த வாகனம் திருப்பம் ஒன்றில்
கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில்
மோதி சாலையின் இடதுபுறத்தில் உள்ள
பள்ளத்தில் விழுந்துள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.

இந்த விபத்தின் போது வாகனம்
பலமுறை சுழன்றதால் அவரது தாயார்
வாகனத்தில் இருந்து தூக்கி
வீசப்பட்டார். இருவரும் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தது உறுதி
செய்யப்பட்டது என்று அவர் இன்று ஒரு
அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு பேரின் உடல்களும் பிரேத
பரிசோதனைக்காக குவா மூசாங்
மருத்துவமனை தடயவியல் பிரிவுக்குக் கொண்டு
செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இவ்விபத்து தொடர்பில் 1987ஆம்
ஆண்டு சாலைப் போக்குவரத்துச்
சட்டத்தின் பிரிவு 41(1)இன் கீழ்
விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

சம்பவம் குறித்த தகவல் தெரிந்த
பொதுமக்கள், குவா மூசாங் மாவட்ட
காவல்துறை தலைமையகத்தின்
புலனாய்வு மற்றும் போக்குவரத்து
அமலாக்கப் பிரிவை 09-9121222 என்ற
எண்ணில் அல்லது விசாரணை
அதிகாரியை 019-4742270 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Pengarang :