SELANGOR

சுற்றுலாத் துறையில் பங்கேற்க இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவர்- தஞ்சோங் சிப்பாட் உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், ஆக 15- தஞ்சோங் சிப்பாட் வட்டாரத்தில் சுற்றுலாத்
துறையில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கான
நடவடிக்கைளில் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக அத்தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் பெர்ஹான் அமான் ஷா கூறினார்.

இளைஞர்கள் நகரங்களுக்கு குடிபெயராமல் இங்கிருந்தே தங்களின்
வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் தஞ்சோங் சிப்பாட் பகுதிக்கான
சுற்றுலா தூதர்களாகச் செயல்படுவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு
கிட்டும் என்று அவர் சொன்னார்.

இப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டங்களில் டிரம்
சேவையை அறிமுகப்படுத்துவதும் அடங்கும். இங்குள்ள
கிராமங்களை வட்டார இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளதால்
அவர்கள் சுற்றுலா வாகன ஓட்டுநர்களாகச் செயல்படவும் முடியும்
என்று அவர் குறிப்பிட்டார்.

கோல சிலாங்கூரில் இருப்பதை போல் இங்கும் 15 முதல் 20 பேர்
வரை பயணம் செய்யக்கூடிய டிரம் வண்டி சேவையை இங்கு
ஏற்படுத்தி கிராமங்களுக்கும் சுற்றுலாச் சேவையை வழங்கலாம்.
இந்த டிரம் வாகன ஓட்டுநர்களாக ஆகும் வாய்ப்பினை வட்டார
இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்
தெரிவித்தார்.

இது தவிர, பிரசித்தி பெற்ற வட்டார உணவுகளான கெரேப்பே,
காப்பி, பாவ், தெம்பே போன்றவற்றை சுற்றுலா பொருள்களாக
பிரபலப்படுத்துவதன் மூலம் கிராமவாசிகளின் வருமானத்தையும்
அதிகரிக்க இயலும் என்றார் அவர்.

மேலும், உள்ளுர் சுற்றுலா ஊக்குவிப்பு அம்சங்களில் ஒன்றாக
வட்டார பண்பாட்டுக் கூறுகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என
அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :