NATIONAL

வங்கிக்குச் செல்லும் போது வணிகருக்கு நேர்ந்த பேரிடி- வெ.70,000 ரொக்கத்தை கொள்ளையனிடம் பறிகொடுத்தார்

கோத்தா பாரு, ஆக 15- வியாபாரம் மூலம் வசூலான 70,000 வெள்ளித்
தொகையை கருப்பு பிளாஸ்டிக் பையில் சுற்றி வங்கிக்குக் கொண்டுச்
சென்ற மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் பாதி வழியில்
அப்பணத்தை கொள்ளையனிடம் பறிகொடுத்தார்.

இச்சம்பவம் இங்குள்ள ஜாலான் கெபுன் சுல்தானில் நேற்று காலை 10.45
மணியளவில் நிகழ்ந்ததாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி முகமது ரோஸ்டி டாவுட் கூறினார்.

அறுபது வயது மதிக்கத்தக்க அந்த வணிகர் வங்கியை நெருங்கிய போது
மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன் ஒருவன் வணிகரின் மோட்டார்
சைக்கிளின் முன்புறம் பொருள் வைக்குமிடத்தில் இருந்த ரொக்கம் மற்றும்
இரு கைபேசிகளை அபகரித்துக் கொண்டு தப்பியதாக அவர் சொன்னார்.

கருப்பு அல்லது கரும்பச்சை நிற மோட்டார் சைக்கிளில் வந்த அந்த
கொள்ளையன் கருப்பு நிற ஜேக்கெட், கருப்பு நிற கால் சட்டை மற்றும்
கருப்பு நிற கவசத் தொப்பியை அணிந்திருந்ததாக அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.

கொள்ளையன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை
அந்த வணிகரால் சரியாக அடையாளம் காண முடியாமல்
போய்விட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :