SELANGOR

மாநிலத் தேர்தல்- அடையாளக் கார்டை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் பினாங்கில் 20 புகார்கள்

ஜோர்ஜ் டவுன், ஆக 16- கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத்
தேர்தலின் போது அடையாளக் கார்டை தவறாகப் பயன்படுத்தியது
தொடர்பில் பினாங்கில் 20 புகார்கள பெறப்பட்டுள்ளன.

இந்த புகார்களின் அடிப்படையில் 20 விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டுள்ள வேளையில் 1954ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் 7வது
பிரிவின் கீழ் இதன் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின்
கூறினார்.

சம்பந்தப்பட்ட இருபது பேரின் தனிப்பட்ட தகவல்கள் அல்லது அடையாளக்
கார்டுகளை மற்ற தரப்பினர் பயன்படுத்திய காரணத்தால் அவர்கள்
தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து தேர்தல் ஆணையம் தடுத்து விட்டதாக
அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் இருபது விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு
விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் நேற்று இங்கு
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி தொடங்கி தேர்தல் தினம் வரை
மாநிலத்தில் தேர்தல் தொடர்புடைய 87 புகார்களை தாங்கள் பெற்றதாக
டத்தோ காவ் தெரிவித்தார்.

இந்த புகார்கள் தொடர்பில் 42 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
போலீஸ் புகார் அல்லது விசாரணை அறிக்கையின் அடிப்படையில்
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர்
தெளிவுபடுத்தினார்.

அந்த 42 புகார்களில் 20 அடையாளக் கார்டுகளை பிறர் தவறாகப்
பயன்படுத்தியது தொடர்பானதாகும். எஞ்சியவை அரசியல் கட்சிகளின்
கொடிகள், பதாகைகள் மற்றும் பிரசுரங்கள் சேதப்படுத்தப்பட்டது
தொடர்பானவையாகும் என்றார் அவர்.


Pengarang :