SELANGOR

200 சமயப் பள்ளிகளை மூட உத்தரவா? சிலாங்கூர் அரசு மறுப்பு

ஷா ஆலம், ஆக 16 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய
சமயப் பள்ளிகளை மூட உத்தரவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டை
மாநில அரசு மறுத்துள்ளது.

அதற்கு மாறாக, இந்த தனியார் பள்ளிகளை முறையாகப் பதிவு செய்வதற்குக் கடந்த
2019ஆம் ஆண்டு முதல் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமிய விவகாரங்களுக்கான தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

முன்னர் பதிவு செய்யப்படாத 416 பள்ளிகளை உள்ளடக்கிய சிலாங்கூர்
தனியார் சமயப் பள்ளி (தாஃபிஸ் நிறுவனம்) பதிவு வழிகாட்டுதல்களை கடந்த 2019ஆம்
ஆண்டு உருவாக்கியது இதற்கு ஆதாரமாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

இந்தக் கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் நிலையை மேம்படுத்தும் குறிக்கோளுடன்
தனியார் சமயப் பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான முயற்சிகளை கீழறுக்கும் சில தரப்பினரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மாநில அரசு மறுக்கிறது
என்று அவர் மேலும் தெரிவித்தார.

அண்மைய காலமாக சமயப் பள்ளிகள் சம்பந்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான
சம்பவங்களைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா
அல்ஹாஜின் ஆணையின்படி பதிவு வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டது என்று
ஜவாவி தெளிவுபடுத்தினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள தாருல் இத்திஃபாகியா தாஃபிஸ்
பள்ளியில் 21 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்களின் உயிரைப் பறித்த தீச்
சம்பவமும் இதில் அடங்கும் என்றார் அவர்.


Pengarang :