NATIONAL

இணையக் குற்றங்களைத் தடுக்க தனியார்-அரசு துறைகள் இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஆக 17- இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு ஏதுவாக
அரசு மற்றும் தனியார் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்தும் கடப்பாட்டை ஒற்றுமை அரசு கொண்டுள்ளதாகத் தொடர்பு
மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இணையக் குற்றங்களைத் தடுப்பதில் அரசு-தனியார் ஒத்துழைப்பு (பி.பி.பி.)
மிகவும் ஆக்ககரமான வழிமுறையாக விளங்குகிறது. இணைய
பாதுகாப்புத் துறையினரும் அரசாங்கமும் ஒருங்கிணைந்து நடுநிலையுடன்
பணியாற்றக் கூடிய தளத்திலிருந்து இது உருவாக்கப்படுகிறது. ஆகவே,
இணையத் தாக்குதலுக்கு எதிராக விரைந்து செயல்படக்கூடிய
அதிகாரத்தை இது பெறுகிறது என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கும் இத்தொழில் துறைக்குமிடையிலான ஒத்துழைப்பு
தொடர்ச்சியானதாகவும் நம்பிக்கையை உருவாக்கக்கூடியதாகவும்
சவால்களை எதிர்கொள்ளக் கூடியதாகவும் ஆக்ககரமான முறையில்
தரவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும் என
அவர் மேலும் சொன்னார்.

இணைய மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை
எடுப்பதற்கும் எச்சரிக்கை விடுப்பதற்கும் சமூக இணைய சேவையைப்
பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டியை வழங்குவதற்கும்
ஏதுவாக இத்துறை சார்ந்த தரப்பினருடன் அரசாங்கம் அணுக்கமாகச்
செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

இங்கு நடைபெறும் 2023ஆம் ஆண்டிற்கான ஆசிய இணைய தற்காப்பு
மற்றும் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டையொட்டி நேற்றிவு
நடத்தப்பட்ட மலேசிய இணையப் பாதுகாப்பு விருதளிப்பு நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :