NATIONAL

மேம்பாட்டுத் திட்டங்களில் கமிஷன் கேட்பதை, கொடுப்பதை நிறுத்துங்கள்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக 17 – வீடமைப்புத் திட்டங்கள் உள்பட எந்தவொரு
மேம்பாட்டுப் பணியின் அமலாக்கத்திலும் கமிஷன் கேட்கும் மற்றும்
கொடுக்கும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் லாபத்தை
ஈட்டுவதிலிருந்தும் எந்தவொரு நிறுவனத்தையும் அரசாங்கம் ஒருபோதும்
தடுத்ததில்லை. எனினும், அமைச்சர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு
கமிஷன் கொடுப்பது ஒருபோதும் நிகழக்கூடாது என்று அவர் சொன்னார்.

நிறுவனங்கள் லாபம் பெறுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்,
முன்பு கடைபிடிக்கப்பட்டதைப் போல அமைச்சர்கள் அல்லது அரசியல்
கட்சிகளுக்கு ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி வெள்ளி
வழங்கும் பழக்கம் வேண்டாம். தங்களை நோகடிப்பதாக கருதி சிலர் என்
மீது கோபத்துடன் இருப்பார்கள். ஆனால், எல்லோருக்கும் தெரியும்.

உண்மை தெரிய கூட்டரசு பிரதேசத்தில் உள்ள மேம்பாட்டாளர்களைக்
கேளுங்கள் என்றார் அவர். நான் உண்மையில் தவறு புரிகிறேனா? அல்லது வேண்டுமென்றே விஷயங்களைப் பெரிது படுத்துகிறேனா? அல்லது நான்
உண்மையைத்தான் சொல்கிறேனா? ஆனால் இது வழக்கமான
நடைமுறை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர் என்று அவர்
மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள டேசா தாசேக் சுங்கை பீசியில் ரெசிடன்ஸி விலாயா மற்றும்
ரெசிடன்ஸி பெரிஹாத்தின் மடாணி திட்டங்களைத் தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த கமிஷன் தொகையை மக்களிடமே திருப்பித் தருவதன் மூலம்
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வீடுகள் மற்றும் முறையான அங்காடி வியாபார மையங்களை அமைத்துத் தருவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :