SELANGOR

சிலாங்கூர் மீண்டும் எழுச்சி பெறுவதை என் வாழ்நாளில் காண வேண்டும்- சுல்தான் விருப்பம்

கிள்ளான், ஆக 22- சிலாங்கூர் மறுபடியும் எழுச்சி பெற்று பழைய
பொற்காலத்தை மீண்டும் பெறுவதை தன் வாழ்நாளில் மீண்டும்
ஒருமுறை காண வேண்டும் என்ற விருப்பத்தை மேன்மை தங்கிய
சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வெளிப்படுத்தியுள்ளார்.

பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை குறிப்பாக, அடிப்படை
வசதிகள் மற்றும் மேம்பாட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கம்
கவனம் செலுத்துவதை உறுதி செய்வது தனது தலையாய கடமையாகும்
என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கிற்கு தலைமையேற்றப் பின்னர்
ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் நீண்ட காலமாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு
காண்பதற்கு ஏதுவாக குறுகிய கால, மத்திம கால மற்றும் நீண்ட காலத்
திட்டங்களை புதிய நிர்வாகம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என
அவர் வலியுறுத்தினார்.

மாநில அரசின் பொருளாதார சாதனைகளை தாம் அங்கீரிப்பதாகக் கூறிய
அவர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் இந்த
சாதனைகள் பொருளற்றதாக ஆகி விடும் என்றார்.

எனக்கு இப்போது 78 வயதாகிறது. நான் கண்களை மூடுவதற்குள்
சிலாங்கூர் எல்லா நிலைகளிலும் எழுச்சி பெறுவதை எனது கனவாகவும்
நம்பிக்கையாகவும் உள்ளது என்றார் அவர்.

மக்கள் சுபிட்சத்துடனும் உகந்த சூழலிலும் வாழ்வதற்கு ஏதுவாக புற
வளர்ச்சி, ஆன்மிக வளர்ச்சி, வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும்
பல்லின மக்களிடையிலான ஒற்றுமை ஆகிய கோணங்களிலும் மாநிலம்
மேம்பாடு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :