ANTARABANGSA

இ.சி.ஆர்.எல். கிழக்குக் கரை இரயில் திட்டப் பணிகள் 50 விழுக்காட்டை எட்டியது

மாரான், ஆக 25- கிழக்குக் கரை இரயில் திட்டப் பணிகள் இதுவரை 48.77
விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக மலேசியன் ரெயில் லிங்க் சென்.
பெர்ஹாட் (எம்.ஆர்.எல்.) தலைவர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி
கூறினார்.

கிளந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தின்
கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம் வரையிலான இந்த இரயில்
தண்டவாளத் திட்டம் வரும் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தலைமைச்
செயலாளருமான அவர் சொன்னார்.

திட்டமிட்டப்படி கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்தால் வரும் 2027ஆம்
ஆண்டு ஜனவரி மாதம் இ.சி.ஆர்.எல். இரயில் சேவை தொடங்கப்படும் என
அவர் தெரிவித்தார்.

இந்த கட்டுமானப் பணியின் மேம்பாடு ஊக்கமூட்டும் வகையில்
உள்ளதாகக் கூறிய அவர், இந்த மெகா திட்டத்தில் அடிப்படை வசதிகள்
தொடர்பான பணிகளில் மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்களின்
பங்கேற்பும் உறுதி செய்யப்பட்டதாகச் சொன்னார்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை குத்தகையாளர்கள்,
திட்ட ஆலோசகர்கள், விநியோகிப்பாளர்கள் உள்ளிட்ட 2,700 உள்நாட்டு
நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளன என்றும் அவர்
தெரிவித்தார்.

இந்த இ.சி.ஆர்.எல். திட்டத்தில் பங்கு பெற்றுள்ள உள்நாட்டு
நிறுவனங்களின் குத்தகை மதிப்பு 1,200 கோடி வெள்ளி எட்டும். சிவில்
பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட 1,080 கோடி வெள்ளியை விட இது
அதிகமாகும் என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் கெடோங் சியாம் 3 பகுதியில் இ.சி.ஆர்.எல். சுரங்கப்
பாதை முழுமைப் பெறும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :