எல்மினா விமான விபத்து- பத்துக்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

ஷா ஆலம், ஆக 27- இம்மாதம் 17ஆம் தேதி இங்குள்ள பண்டார் எல்மினா அருகே நிகழ்ந்த விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக  இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம்  போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப் பட்டவர்களில்  அந்த விமான விபத்து தொடர்பான காணொளிகளை வைத்திருப்பவர்கள், விமான நிறுவனம் மற்றும் மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து  ஆணையத்தின் (சி.ஏ.ஏ.எம்.) பிரதிநிதிகளும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

நேற்று  ஷா ஆலம் அரங்கில் நடைபெற்ற சிலாங்கூர் மெர்டேக்கா ரைட் மற்றும் கலை நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் விமான விபத்து பாதுகாப்பு மையம்  (பி.எஸ்.கே. யு.) மேற்கொண்டு வரும் விசாரணையின்   ஆகக் கடைசி நிலவரங்களுக்காக நாங்கள்  காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

கத்ரி நெடுஞ்சாலையில் பண்டார் எல்மினா அருகே நிகழ்ந்த அந்த விமான விபத்தில்  பகாங் மாநில ஊராட்சி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் விமானத்தின் ஆறு பயணிகள், இரு விமானிகள் மற்றும் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரும் அடங்குவர்.

 


Pengarang :