SELANGOR

சமயப்பள்ளிகள் மூடப்படுகிறதா? பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க சுல்தான் உத்தரவு

ஷா ஆலம், ஆக 29 – சிலாங்கூர் மாநிலத்தில்
உள்ள தாஃபிஸ் மையங்கள் மற்றும் தனியார்
சமயப் பள்ளிகள் மூடப்படும் என்ற
பொய்யானக் குற்றச்சாட்டை சுமத்தி வரும்
தரப்பினர் மீது காவல்துறையினர் உரிய
நடவடிக்கை எடுப்பர் என்று தாம் நம்புவதாக
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
தெரிவித்தார்.

இத்தகையக் குற்றச்சாட்டுகள்

பெற்றோரை கவலையடையச்
செய்துள்ளதோடு மாநிலத்தில் உள்ள சமய
மையங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் மீதான
முஸ்லிம்களின் நம்பிக்கையையும்
சிதைத்துவிட்டது என்று சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

இதுபோன்ற துரோக மற்றும் பொறுப்பற்ற
செயலைகளை நிறுத்திக்கொள்ளுமாறு
சம்பந்தப்பட்டத் தரப்பினரை அறிவுறுத்திய
அவர், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு
முன், பொறுப்பானவர்களிடம் உண்மை
நிலையைக் அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்
கொண்டார்.

அவதூறானத் தகவல்களுக்குப்
பொறுப்பானவர்களைக் கண்டுபிடித்து
அவர்கள் மீது சட்டப்படி உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறு காவல்

துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையில், பதிவு செய்யப்படாத தனியார்
சமய மற்றும் தாஃபிஸ் பள்ளிகளை பதிவு
செய்ய நான்தான் உத்தரவிட்டேன்.

இந்தப் பள்ளிகள் பாதுகாப்பாகவும்,
மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கு
வசதியான கற்றல் சூழலைக் கொண்டதாகவும்
இருப்பதை உறுதி செய்வதற்காகவே
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அவர்
சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற இஸ்லாமிய மத
விவகாரங்களுக்கான மலேசிய தேசிய மன்றக்
கூட்டத்திற்கு தலைமையேற்றபோது அந்த
மன்றத்தின் தலைவருமான அவர் இவ்வாறு
கூறினார்.

சிலாங்கூரில் பல சமயப் பள்ளிகளை

மாநில அரசு மூடி வருவதாக அண்மையில்
நடைபெற்ற மாநிலத் தேர்தலின் போது சில
அரசு சாரா அமைப்புகள்
குற்றஞ்சாட்டியிருந்தன.

எனினும், சமயப் பள்ளிகள் மூடப்படுவதாக
கூறப்படும் குற்றச்சாட்டை மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.


Pengarang :