SELANGOR

கட்டாய முகக்கவரி விதிகளை மீறியதற்காக 37 உணவகங்களுக்கு அபராதம்- எம்.பி.ஏ.ஜே. நடவடிக்கை

அம்பாங் ஜெயா, ஆக 29- கட்டாய முகக்கவரி விதிகளை மீறிய குற்றத்திற்காக மொத்தம் 37 உணவகங்களுக்கு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அபராதம் விதித்தது.

இவ்வாண்டு ஜூலை முதல் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் பிளாஸ்டிக் பை விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை அறிவிக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கான மேலும் 106 வர்த்தக மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது கூறினார்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறு குற்றச் சட்டத்தின் 4(4) சி பிரிவின் கீழ் அவ்விரு குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பரவல் மற்றும் உணவு மாசுபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுப்பதற்கு அனைத்து உணவக நடத்துனர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்த விதிமுறை இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வந்த வேளையில் இதனை அமல்படுத்துவதற்கு உணவகங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் ஜூலை 1ஆம்  தேதிக்கு பிறகு இந்த விதிகளை மீறும் உணவகங்களுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 5 கோடியே 61 வெள்ளி மதிப்பீட்டு வரியையும் 1 கோடியே 17 லட்சம் வெள்ளி வரி பாக்கியையும் வசூலித்துள்ளதாக டாக்டர் அனி தெரிவித்தார்.


Pengarang :