மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப ஷா ஆலமில் அதிக மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும்

ஷா ஆலம், செப் 4 – மாநிலத்தில் மின்சார வாகன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நகரின் முக்கிய வணிகப் பகுதிகளில் 10 மின்சார வாகன (இ.வி.) சார்ஜிங் நிலையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவ ஷா ஆலம்  மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளது.

மின்சார கார்களின் பயன்பாடு  ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப  முக்கிய வணிக மையங்களில் தேவையின் அடிப்படையில் கூடுதல் இ.வி.சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஷா ஆலம் டத்தோ பண்டார் நோர் புவாட் அப்துல்  ஹமிட் கூறினார்.

மின்சாரக் கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த இ.வி. உள்கட்டமைப்பை நிறுவ விரும்பும் பல ஆர்வமுள்ள தரப்பினர் எங்களை அணுகியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இக்கொள்கை இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்று  இன்று இங்குள்ள எம்பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் 15 வது கிழக்கு ஆசிய போக்குவரத்து ஆய்வு சங்கத்தின் (EASTS) நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

 சிறந்த போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் நடைமுறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த EASTS மாநாடு ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு இங்கு நடைபெறும் இந்த மாநாட்டில் கொரியா, ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், தைவான் மற்றும் சூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 700 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


Pengarang :