SELANGOR

2035ஆம் ஆண்டிற்குள் நட்புறவான போக்குவரத்து முறை கொண்ட மாநகராக ஷா ஆலமை உருவாக்க இலக்கு

ஷா ஆலம், செப் 5 – எதிர்வரும் 2035ஆம் ஆண்டிற்குள் நட்புறவான
போக்குவரத்து முறையைக் கொண்ட மாநகராக ஷா ஆலமை உருவாக்கும்
இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை ஷா ஆலம் மாநகர் மன்றம்
முன்னெடுக்கவுள்ளது.

இந்நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில்
மாநகரின் 2,000 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் முழுவதிலும்
மைக்ரோமோபிலிட்டி வாகன பயன்பாட்டிற்கு உகந்த வசதிகளை
ஏற்படுத்தித் தருவதும் அடங்கும் என்று டத்தோ பண்டார் டாக்டர் நோர்
புவாட் அப்துல் ஹமிட் கூறினார்.

சாலை பயனீட்டுக்கான புதிய பாணியாக இந்த மைக்ரோமோபிலிட்டி
வாகனங்கள் பயன்படுத்தப்படுவதை தாங்கள் ஊக்குவிக்க விரும்புவதாக
அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலமிலுள்ள 800,000 குடியிருப்பாளர்களில் 10 விழுக்காட்டினர் மூத்த
குடிமக்களாக உள்ளதால் இந்த மைக்ரோமோபிலிட்டி வாகன பயன்பாட்டில்
அத்தகைய தரப்பினருக்கு முக்கியத்துவம் வழங்க தாங்கள் இலக்கு
நிர்ணயித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நேற்று 15வது
போக்குவரத்து ஆய்வுக்கான கிழக்காசிய சமூக அனைத்துலக மாநாட்டின்
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மின் ஸ்கூட்டர்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் மாநகரின்
வடிவமைப்பை மாற்றியமைப்பதிலும் தாங்கள் தீவிரம் காட்டி வருவதாக
டாக்டர் நோர் புவாட் கூறினார்.

மேலும் எல்.ஆர்.டி. எனப்படும் இலகு இரயில் திட்டத்தின் இரு
நிலையங்கள் பெர்சியாரான் டத்தோ மந்திரி புசார் மற்றும் ஷா ஆலம்
ஸ்டேடியம் ஆகிய பகுதிகளில் அடுத்தாண்டில் பூர்த்தியானவுடன்

மாநகரில் போக்குவரத்து முறை மேலும் சிறப்பான அடைவுநிலையைப்
பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :