ANTARABANGSA

நீடித்த நிலைத்தன்மைக்கு சுஹைஸானை ஆதரியுங்கள்- சீன வாக்காளர்களுக்கு மாட் சாபு வேண்டுகோள்

ஜோகூர் பாரு, செப் 5- பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில்
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் காயாட்டிற்கு
அத்தொகுதியிலுள்ள சீன சமூகம் ஆதரவளிக்கும் அமானா கட்சி
நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்நாட்டை ஒரே இனம் ஆட்சி செய்தால் நாட்டில் நிலைத்தன்மை
இருக்காது எனக் கூறிய அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது சாபு,
பல்லின மக்களுக்கிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும்
வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில்
நம்பிக்கையை அதிகரிக்கும் என்றார்.

ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்
நாட்டிற்கு வந்தால் நாட்டின் பொருளாதாரத்தை நாம் மேம்படுத்த முடியும்.
நாடு அமைதியாக இருந்தால் மட்டுமே வெளிநாட்டினர் நாட்டிற்கு
வருவார்கள் என்று அவர் சொன்னார்.

நாட்டை மேம்படுத்துவதற்கு எல்லா இன மக்களும் ஒன்றிணைந்து
பாடுபட வேண்டும். ஒற்றுமை அரசாங்கத்தில் மட்டுமே அந்த
நிலைத்தன்மையைக் காண முடியும். மற்ற கூட்டணிகளில் இதனைக்
காண முடியாது. காரணம் அவை ஒரு இனத்தை அடிப்படையாகக்
கொண்டவை என்றார் அவர்.

இங்குள்ள தாமான் புக்கிட் இண்டாவில் நேற்றிரவு நடைபெற்ற சீன
சமூகத்தினருடனான ஒற்றுமை விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது
அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பூலாய் தொகுதியில் 166,653 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 40.46
விழுக்காட்டினர் அல்லது 67,434 பேர் சீனர்களாவர்.


Pengarang :