SELANGOR

இந்திய பாரம்பரியத் தொழில்துறைகளுக்கு 30,000 தொழிலாளர்கள் தேவை- அமைச்சர் சிவகுமார் தகவல்

கிள்ளான், செப் 6- இந்திய பாரம்பரியத் தொழில்துறைகளான
சிகையலங்காரம், ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கு தேவைப்படும்
அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 30,000க்கும் அதிகம் இல்லை என்று
மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் கூறினார்.

அந்நியத் தொழிலாளர்களின் தேவை தொடர்பில் அந்த மூன்று
துறைகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து தாங்கள் தொடர்ச்சியாக
விண்ணப்பங்களைப் பெற்று வந்ததாக அவர் சொன்னார்.

இருந்த போதிலும், அந்த மூன்று துறைகளுக்கும் வழங்கப்படவிருக்கும்
அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து வரும்
வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில்
முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த மூன்று துறைகளும் எதிர்நோக்கும் மிகக் கடுமையான அந்நியத்
தொழிலாளர் பற்றாக்குறையை நாங்கள் உணர்ந்துள்ளோம். அனுமதி
வழங்கப்படும் அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் இந்த
விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சரவை நிலையில்
விரிவான விவாதம் நடத்தப்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள, ஜாலான் தெங்கு கிளானா, லிட்டில் இந்தியாவில்
இந்திய வர்த்தகர்களுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைக் கூறினார்.

இதுநாள் வரை முடக்கம் கண்டிருந்த மூன்று துறைகளில் அந்நியத்
தொழிலாளர்களை அனுமதிக்கக் கோரி முன் வைக்கப்பட்ட
விண்ணப்பத்தில் ஒரு பகுதி அங்கீகரிக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

எனினும், அந்த துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு
காண்பதற்கு ஏதுவாக உள்நாட்டு இளைஞர்களுக்கு உரிய பயிற்சிகள்
வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார்.


Pengarang :