NATIONAL

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வெ.3.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்

நீலாய், செப் 6- அரச மலேசிய சுங்கத் துறை கடந்த மாதம் 29ஆம் தேதி
சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்
(கே.எல்.ஐ.ஏ.) சரக்கு கையாளும் கட்டிடத தொகுதியில் மேற்கொண்ட
அதிரடிச் சோதனையில் 3 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான 436.2
கிலோ மெத்தலேனிடியோமெத்தம்பெத்தமின் 3,4 வகை போதைப்
பொருளைக் கைப்பற்றியது.

மாலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையின் போது
36 அட்டைப் பெட்டிகள் சோதனையிடப்பட்டு அதில் 12 பெட்டிகளில்
பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்த பல்வேறு வர்ணங்கள் மற்றும்
வடிவத்திலான எக்ஸ்டசி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்
துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சுஜைலி ஜோஹான் கூறினார்.

எஞ்சிய 24 பெட்டிகளில் செங்கற்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவர்,
போதைப் பொருள் அடங்கிய பெட்டிகளில் பல்வேறு உபகரணங்கள்
உள்ளதாக அதிகாரிகளிடம் பிரகடனப்படுத்துவது போதைப் பொருள்
கடத்தல் கும்பலின் வழக்கமான பாணியாகும் என அவர் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் எடையைக் கொண்டு
மதிப்பிடுகையில் 21 லட்சத்து 80 ஆயிரம் போதைப் பித்தர்கள் இதனைப்
பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து அனுப்பப்பட்ட அந்த போதைப் பொருள்
இறுதியாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை
வந்தடைந்துள்ளது என்று இங்குள்ள அரச மலேசிய சுங்கத் துறையின்
தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
சொன்னார்.

இந்த போதைப் பொருளின் இறக்குமதியாளர் போலியான பெயரை
ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதால் இந்த கடத்தலுக்குப் பொறுப்பானத்
தரப்பினரை அடையாளம் காண்பது சிரமம் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :