NATIONAL

பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் பலி

ஷா ஆலம், செப் 6: நேற்று இரவு ஷா ஆலம் நோக்கிச் செல்லும் மத்திய நெடுஞ்சாலையில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உணவு விநியோகம் செய்பவர் (பி-பங்கிலான்) இறந்தார்.

இரவு 7.08 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், பலத்த காயமடைந்த 22 வயதுடைய ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதாகப் பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

யமஹா லெஜெண்டா மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவர், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுவதற்கு முன்பு பேருந்தின் பக்கத்தில் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது என பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் விளக்கினார்.

“விபத்தில் பலத்த காயமடைந்த அந்நபர் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ” என்று உதவி ஆணையர் முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.

விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மத்திய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்து அபாயத்தைக் குறைக்க வழங்கப் பட்டுள்ள சிறப்புப் பாதைகளைப் பயன்படுத்தவும் அவர் நினைவூட்டினார்.

அபாயகரமாக வாகனம் ஓட்டுபவர்களிடம் காவல்துறையினர் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும், சட்டத்தை மீறி சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :