SELANGOR

ஏழு மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து- எம்.டி ஏ. நடவடிக்கை

புத்ராஜெயா, செப் 7- பதிவு செய்யப்படாத
மருத்துவ உபகரணங்களை விற்பனை
செய்ததற்காக மருத்துவ சாதன தயாரிப்பு,
விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட
ஏழு நிறுவனங்களின் வணிக உரிமங்கள் இந்த
ஆண்டில் இதுவரை ரத்து
செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ சாதன
ஆணையத்தின் (எம்டிஏ) தலைமை நிர்வாகி
டாக்டர் பி.முரளிதரன் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு மருத்துவ சாதனச்

சட்டத்தின் (சட்டம் 737) இன் கீழ்
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்டு
வரையிலானக் காலக்கட்டத்தில் இந்த வணிக
உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக அவர்
கூறினார்.

கைப்பற்றப்பட்ட சாதனங்களில் டிஜிட்டல்
தெர்மோமீட்டர்கள், இரத்த அழுத்த
சோதனைக் கருவிகள் மற்றும் ஆணுறைகள்
ஆகியவையும் அடங்கும் என்று அவர்
சொன்னார்.

எம்.டி.ஏ. மற்றும் மம்பு எனப்படும் மலேசிய
நிர்வாக நவீனமய மற்றும் மேலாண்மை
திட்டமிடல் பிரிவு ஆகியவற்றுக்கு
இடையேயான மருத்துவ சாதன
மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப
முறை மேம்பாட்டு ஆலோசனை சேவை
தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடும்
நிகழ்வில் கலந்து

கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

அதிகாரிகளின் அனுமதி பெறாத மற்றும்
பயனீட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும்
சட்ட விரோத மருத்துவ சாதனங்களை
விற்பனை செய்ததற்காகவும்
விநியோகித்ததற்காகவும் அந்த நிறுவனங்கள்
மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்
என்று டாக்டர் முரளிதரன் கூறினார்.

எம்.டி.ஏ.என்பது சுகாதார அமைச்சின் கீழ்
உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது
மருத்துவ சாதனங்கள் மற்றும்
தொழில்துறையை கட்டுப்படுத்தும் மற்றும்
ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்கிறது.


Pengarang :