SELANGOR

சிலாங்கூர் வான் கண்காட்சியில் விமானங்களை மந்திரி புசார் பார்வையிட்டார்

ஷா ஆலம், செப் 7- மூன்றாவது சிலாங்கூர் வான் போக்குவரத்து
கண்காட்சியை (எஸ்.ஏ.எஸ்.) மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
இன்று காலை இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங் ஸ்கைபார்க் விமான
பிராந்திய மையத்தில் அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள
தனியார் மற்றும் பந்தய விமானங்கள் உள்பட சுமார் 50 விமானங்களை
அவர் பார்வையிட்டார்.

இந்த தொடக்க நிகழ்வில் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இங் ஸீ ஹான் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை
துணையமைச்சர் லியு சின் தோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு
நடைபெறும் இந்த கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்
சேர்ந்த 117 கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மந்திரி புசார், வான் போக்குவரத்து சார்ந்த
தயாரிப்பு, ஆராய்ச்சி மற்றும் சேவைத் துறைகளில் முக்கிய அடையாளச்
சின்னமாக சிலாங்கூர் உருவாகி வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிலாங்கூர் தாமான்
அக்ரோ மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும்
சடங்கையும் அமிருடின் பார்வையிட்டார். மந்திரி புசார் கழகத்திற்கும்
(எம்.பி.ஐ.) வான் போக்குவரத்து துறை சார்ந்த ஆறு நிறுவனங்களுக்கும்
இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த வான் போக்குவரத்து
கண்காட்சியின் வழி 70 கோடி வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனையைப்
பதிவு செய்ய ஏற்பாட்டாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த
கண்காட்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க், சிங்கப்பூர்,

ஆஸ்திரேலியா, ஹாங்காங் உள்ளிட் நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த
கண்காட்சியில் சுமார் 20,000 வருகையாளர்கள் கலந்து கொள்வர் என
எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :