ANTARABANGSA

ஜோகூர் இடைத் தேர்தல் ஒற்றுமை அரசாங்கத்திற்கு முக்கிய அளவுகோள்- ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் பாரு, செப் 8- பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம்
சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள்
வாக்குறுதிகள் மூலம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு இன்னும் 24
மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாசமே உள்ளது.

வாக்காளர்களைக் கவர்வதில் குறிப்பாக இன்னும் முடிவெக்க முடியாத
நிலையில் இருக்கும் மதில் மேல் வாக்காளர்களை வசப்படுத்துவதில்
தேர்தல் பிரசாரம் முக்கியப் பங்கினை ஆற்றுகிறது. இத்தகைய
பிரசாரங்கள் வாக்குகளாக மாறி வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.

இந்த தேர்தல் குறித்து கருத்துரைத்த மலேசிய தேசிய
பல்கலைக்கழகத்தின் அரசியல் சமூக நல ஆய்வாளரும் இணைப்
பேராசிரியருமான முகமது அஸார் அப்துல் ஹமிட், பக்கத்தான்
ஹராப்பானுக்கு கிடைக்கும் வெற்றி ஒற்றுமை அரசாங்கத்திற்கான
முக்கிய அளவுகோளாக விளங்கும் என்றார்.

பூலாய் நாடாளுமன்றத் தேர்தலில் பாக்கத்தான் ஹராப்பான் வெற்றி
பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், அண்மையில்
நடைபெற்ற மாநிலத் தேர்தலின் போது அடையாளம் காணப்பட்ட
பலவீனங்கள் மூலம் பக்கத்தான் ஹராப்பானும் பாரிசான் நேஷனலும்
படிப்பினையைப் பெற்றுள்ளதாகச் சொன்னார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆறு மாநிலத் தேர்தல்களில்
பக்கத்தான் ஹராப்பானுக்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையே
போதுமான அளவு ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. வாக்காளர்களைத்
திரட்டுவதில் அம்னோ போதுமான வலிமையைப் பெற்றிராததையும் காண
முடிந்தது.

ஆனால், ஜோகூரில் நிலைமை தனித்துவமானது. காரணம்,
இம்மாநிலத்தில் அக்கட்சி வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.
அண்மைய மாநிலத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில்
40ஐ அம்னோ வென்றது என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இடைத் தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளும் அமானா
கட்சிக்கு சொந்தமானவையாக இருந்தாலும் அத்தொகுதிகளில் கிடைக்கும்
வெற்றி ஒற்றுமை அரசாங்கத்திற்கு தார்மீக ரீதியிலான
நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர் பேராசிரியர்
டத்தோ சண்முகப் பாண்டியன் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் அடித்தளத்தில் எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஆனால் அது ஒற்றுமை
அரசாங்கத்தின் தார்மீக அங்கீகாரம் மீது கேள்வியெழுப்பும் என்று அவர்
சொன்னார்.


Pengarang :