ANTARABANGSA

சிங்கப்பூர் சுற்றுப்பயணிகள் பயணம் செய்த வேன் பள்ளத்தில் விழுந்தது- ஒருவர் மரணம், 10 பேர் காயம்

பாலிக் பூலாவ், செப் 25- சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை
ஏற்றியிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆறு மீட்டர் பள்ளத்தில்
விழுந்ததில் பெண்மணி ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் பத்து பேர்
காயங்களுக்குள்ளாயினர். இச்சம்பவம் இங்குள்ள புக்கிட் கெந்திங்கில்
நேற்றிரவு நிகழ்ந்தது.

இந்த விபத்து குறித்து நேற்றிரவு 8.20 மணிக்கு தங்களுக்குத் தகவல்
கிடைத்ததாக பாலிக் பூலாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்
நடவடிக்கை பிரிவுத் தலைவர் என். பிரினவரன் கூறினார்.

தகவல் கிடைத்த பத்து நிமிடங்களில் தீயணைப்புக் குழுவினர் சம்பவ
இடத்தை அடைந்ததாகக் கூறிய அவர், மலைப்பாங்கான அந்த இடத்திற்கு
தீயணைப்பு வண்டி செல்ல முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மீட்புக்
கருவிகளுடன் சுமார் 15 நிமிடம் மலைப் பகுதியில் நடந்து சென்று விபத்து
நிகழ்ந்த இடத்தை அடைந்ததாகச் சொன்னார்.

பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில்
மேலும் ஏழு பேர் வேனின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மேலும்
மூவர் பொதுமக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டனர் என்று அவர்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்தில் சிக்கிக் கொண்ட பெண்மணி ஒருவரை
மீட்க வேனின் ஸ்டியேரிங் மற்றும் அதன் முன்பக்கத்தை விஷேசக்
கருவிகள் மூலம் தாங்கள் வெட்டி எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இரவு 10.45 மணியளவில் இந்த மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்ததாகவும்
விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, அந்த வேனில் எட்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள்
உள்ளிட்ட 11 பேர் இருந்ததாகவும் அவர்களில் 10 பேர் சிங்கப்பூரைச்

சேர்ந்த சுற்றுப்பயணிகள் என்றும் பாராட் டாயா மாவட்ட போலீஸ்
தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிஸால் கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் இன்னும்
கண்டறியப்படவில்லை என்றும் இவர்கள் அனைவரும் பினாங்கு
மாநிலத்திற்கு சுற்றுலா வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் என
நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :