NATIONAL

பழ வியாபாரி கொலை வழக்கிற்கு 48 மணி நேரத்தில் தீர்வு- 13 அந்நிய நாட்டினர் கைது

கோலாலம்பூர், செப் 29- பழ வியாபாரியான முதியவர் ஒருவரின்
படுகொலை தொடர்பான வழக்கிற்கு போலீசார் 48 மணி நேரத்தில் தீர்வு
கண்டுள்ளனர். இங்குள்ள ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள இரட்டை மாடி
வீட்டின் எதிரே கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம்
தொடர்பில் 13 அந்நிய நாட்டினர் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.

பிரீக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் உதவியுடன்
கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை கடந்த இரு தினங்களில்
பல்வேறு இடங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் 22 முதல் 52
வயது வரையிலான அந்த 13 பேரும் கைது செய்யப்பட்டதாக பிரீக்பீல்ட்ஸ்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர்
கூறினார்.

தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட
போலீசார் இந்த படுகொலையில் தொடர்புடைய முக்கிய நபரை நேற்று
காலை கைது செய்து அவனிடமிருந்து வழக்கிற்கு தேவையான
ஆதாரங்களைக் கைப்பற்றினர். இந்த வழக்கிற்கு 48 மணி நேரத்தில்
வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளோம் என்று நேற்று இங்கு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக அவர்கள்
அனைவரையும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை தடுத்து
வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை தாங்கள் பெற்றுள்ளதாக அவர்
சொன்னார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணியளவில் நிகழ்ந்த
இச்சம்பவத்தில் ஓ.யு.ஜி. கார்டனிலுள்ள ஒரு வீட்டின் எதிரே 80 வயது
மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரின்
உடலில் பல்வேறு இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன.


Pengarang :