SELANGOR

புக்கிட் கெமுனிங் லோட் நிலக் குடியிருப்புகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வருகை- மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

ஷா ஆலம், அக் 2- இங்குள்ள புக்கிட் கெமுனிங் எட்டாவது மைலில்
உள்ள லோட் நிலக் குடியிருப்புகளுக்குக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற
உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் நேற்று வருகை மேற்கொண்டு
குடியிருப்பாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த லோட் நிலங்களில் காணப்படும் பழுதடைந்த சாலைகள், புதர்களால்
மூடப்பட்ட வடிகால்கள், முறையாக அகற்றப்படாதக் குப்பைகள், எரியாத
சாலை விளக்குள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணும்
நோக்கில் அவர் இந்த வருகையை மேற்கொண்டார்.

கம்போங் புக்கிட் கெமுனிங் நடவடிக்கைக் குழுவின் தலைவர் பொன்
சந்திரன் இந்த கள ஆய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஷா ஆலம் மாநகர்
மன்ற உறுப்பினர் ஷாகிர் மற்றும் இந்திய சமூகத் தலைவர் பத்மநபான்
ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினரோடு உடன் வந்திருந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரத்தை இப்பகுதியில் செலவிட்ட பிரகாஷ்,
வட்டார குடியிருப்பாளர்கள் முன்வைத்த குறைகள் மற்றும்
கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை
முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

பிரதான சாலை மற்றும் கால்வாய் பிரச்சனைக்குப் பொதுப்பணித்துறை
மற்றும் மாநில வடிகால் நீர்பாசனத் துறையின் உதவியுன் தீர்வு
காணப்படும் என அவர் சொன்னார்.

இதனிடையே, தங்களின் வேண்டுகோளை ஏற்று புக்கிட் கெமுனிங்
வட்டாரத்தில் நிலவும் பிரச்சனைகளை நேரில் கண்டறிய வருகை தந்த
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக்
கொள்வதாக பொன். சந்திரன் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் இந்தியர்கள் அதிகம் வசிக்கும்
இப்பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் எனத் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாக முன்னாள் இந்திய சமூகத் தலைவருமான அவர் சொன்னார்.


Pengarang :