SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனைக்கு இந்தியர்கள் மத்தியில் குறைவான ஆதரவு- கவுன்சிலர் ராமு ஏமாற்றம்

ஷா ஆலம், அக் 3- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு
விற்பனைக்கு இந்தியர்கள் மத்தியில் போதுமான ஆதரவு இல்லாதது
ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தாமான் ஸ்ரீமூடா போன்ற பகுதிகளில்
நடைபெறும் இந்த விற்பனைத் திட்டங்களில்கூட மிகவும் குறைந்த
எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொள்வதாக ஷா ஆலம் மாநகர்
மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

ஸ்ரீ மூடா வட்டார மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த மலிவு
விற்பனையை தாம் இங்கு மாதந்தோறும் ஏற்பாடு செய்து வருவதாகக்
கூறிய அவர், இந்த விற்பனையில் கலந்து கொள்ளும் பிற இனத்தினரை
விட இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகவே உள்ளது
என்றார்.

இன்றைய மலிவு விற்பனை நிகழ்வில் 400 வரை கலந்து கொண்ட
நிலையில் அவர்களின் இந்தியர்களின் எண்ணிக்கை 30 பேருக்கும்
குறைவாகவே இருந்தது என்று இங்குள்ள எண்டோரா அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனையின் போது
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் அத்தியாவசியப்
பொருள்களை விற்பனை செய்யும் இந்த திட்டத்தை மத்திய அரசின்
ஆதரவுடன் மாநில அரசு நடத்தி வருகிறது. தினசரி மூன்று தொகுதிகளில்
நடைபெறும் இந்த விற்பனைகள் குறித்த தகவல்களை மற்ற இனத்தினர்
சமூக ஊடங்கள் வாயிலாக அறிந்து அத்தியாவசியப் பொருள்களை
மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை பயன்படுத்திக்
கொள்கின்றனர்.

இந்த விற்பனையில் பங்கு கொள்வதற்கான வரிசை எண்களைப்
பெறுவதற்காக பலர் காலை 7.00 மணி முதல் வரிசையில் நிற்கும்
வேளையில் நம்மவர்களில் சிலர் தாமதமாக வந்து பொருள்கள்
கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொள்கின்றனர். இந்த விற்பனை
தொடர்பான தகவல்களை பி.கே.பி.எஸ். தனது அகப்பக்கத்தில்
வெளியிடுகிறது. ஸ்ரீ மூடா வட்டாரத்தில் நடைபெறும் மலிவு விற்பனை
தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக நாங்களும் பகிர்ந்து
வருகிறோம். இருந்தும் நம்மினத்தினர் மத்தியில் காணப்படும் குறைவான
வரவேற்பு வருத்தமளிக்கும் வகையில் உள்ளது என்றார் அவர்.

பொருள் விலையேற்றம் கண்டுள்ள தற்போதைய சூழலில் மிகவும்
குறைவான விலையில் பொருள்களை வாங்குவதற்கு வழங்கப்படும் இந்த
வாய்ப்பினை இந்தியர்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினர் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராமு
கேட்டுக் கொண்டார்.


Pengarang :