சுங்கை லாங் மற்றும் சிகிஞ்சானில் மீன் இறக்குமதி துறைமுகங்களை எம்.பி.ஐ. நிர்மாணிக்கும்

ஷா ஆலம், அக் 5- சபாக் பெர்ணம் மேம்பாட்டு வட்டாரத் திட்டத்தின்
(சாப்டா) கீழ் சுங்கை லாங் மற்றும் சிகிஞ்சானில் இரு மீன் இறக்குமதி
துறைமுகங்களை எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம்
நிர்மாணிக்கும்.

சுங்கை லாங்கில் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் சுமார் 10 கோடி
வெள்ளி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த முதல் கட்ட நிர்மாணிப்புத்
திட்டம் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற 12 மாதங்களில் செயல்படத் தொடங்கும்
என்று எம்.பி.ஐ. பொருளாதார மற்றும் நிதி பிரிவின் தலைவர் ஜனிஃபா
அஸூரா அகமது கூறினார்.

நாம் துனா மீன்கள் மற்றும் ஆழ்கடல் மீன்களை கொண்டு வர
வேண்டியுள்ளதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழுக்கு ஏற்பட
இந்த துறைமுகத்தை நிர்மாணிக்க அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்நோக்கத்திற்காக இங்கு வரும் கப்பல்கள் சாதாரணக் கப்பல்கள் போல்
இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

உயர் தரத்திலான நீடித்த மேம்பாட்டுத் திட்டமாக இது விளங்க வேண்டும்
என்பதால் வசீகரிக்கக்கூடிய வடிவமைபையும் நவீன வசதிகளையும் இந்த
துறைமுகம் கொண்டிருக்கும். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்த
நிபந்தனைகள் துணை புரியும் என்றார் அவர்.

நேற்றிரவு ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் இடம் பெற்ற விவாத
நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சபாக் பெர்ணம் மேம்பாட்டுத் திட்டம் குறித்து கருத்துரைத்த அவர்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் தர நிர்ணயித்திற்கேற்ப 40 விழுக்காட்டு
வனப்பகுதிகளை கொண்டுள்ளதால் அத்திட்டத்தால் அப்பகுதிக்கு எந்த
பாதிப்பும் ஏற்படாது என்றார்.

பெரிய படகுகள் நுழைவதற்கு ஏதுவாக மலேசிய மீன்வள மேம்பாட்டுத்
துறை, சிகிஞ்சான் மீன் தொழில்துறை சங்கம் உள்ளிட்ட தரப்பினருடன்
இணைந்து அப்பகுதியில் கடல் ஆழப்படுத்தப்படும் என்றும் அவர்
சொன்னார்.


Pengarang :