NATIONAL

மேம்பாடு, சமூக நலனுக்கு முக்கியத்துவம் தரும் 2024 பட்ஜெட்டை பிரதமர் இன்று 4.00 மணிக்குத் தாக்கல் செய்கிறார்

கோலாலம்பூர், அக் 13- மடாணி மலேசியா 2024 வரவு செலவுத் திட்டத்தை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 4.00 மணிக்கு
மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் என்ற முறையில் நிதியமைச்சருமான
அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக இது
விளங்குகிறது.

வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் தாக்கல் செய்யும் நிகழ்வை நாட்டின்
பிரதான தொலைக்காட்சி நிறுவனங்களும் சமூக ஊடகங்களும் மாலை 4.00
மணி தொடங்கி நேரடி ஒளிபரப்பு செய்யும்.

நாட்டின் மேம்பாடு மற்றும் சமூக நல நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவும்
உலகலாவிய தாக்கத்திற்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை
அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்வதில் இந்த வரவு செலவுத்
திட்டத்தில் அடங்கியுள்ள அம்சங்கள் துணை புரியும் என்று நம்புகிறோம்
என்று பிரதமர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

நிதி நிலை சீர்திருத்தம், நிர்வாகத்தை வலுப்படுத்துவது, வீண் விரயத்தை
குறைப்பது மற்றும் இயற்கை வளங்களைப் பல்வகைப்படுத்துவதற்கான
திட்டங்களை அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கும்
என எதிர்பார்க்கப்ப்படுகிறது.

நடப்பு பொருளாதாரச் சூழல் மற்றும் மக்களின் சுபிட்சம் ஆகியவற்றை
கருத்தில் கொண்டு அடுத்தாண்டிற்கான நாட்டின் இலக்கை வரைவதற்கான
திட்டங்களையும் இந்த வரவு செலவு கொண்டிருக்கும்.

2024ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா சட்ட வரைவு மக்களவை
சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்வரும் அக்டோபர் 16 முதல் எட்டு
நாட்களுக்குக் கொள்கை ரீதியாக விவாதிக்கப்படும். பின்னர் இதன் தொடர்பில் அமைச்சர்கள் பதிலளிக்கும் அங்கம் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறும்.


Pengarang :