NATIONAL

மெர்டேக்கா  கிண்ண இறுதியாட்டம் தேசிய அரங்கில் நடைபெறும்

கோலாலம்பூர், அக் 16 – மலேசியா மற்றும் தஜிகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  2023 மெர்டேக்கா கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டம் நாளை  செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில்  திட்டமிட்டபடி நடைபெறும்.

அந்தத் திடல்  பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பது தொழில் நுட்ப சோதனை மற்றும் மதிப்பீடுகளுக்குப் பின்னர்  கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசிய கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எம்.) பொதுச்செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரஹ்மான் ஒர் அறிக்கையில் கூறினார்.

கடந்த வெள்ளியன்று  ஹரிமாவ் மலாயா அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆட்டத்தின் போது திடல் திருப்திகரமான நிலையில் இல்லாத போதிலும்  ஸ்டேடியம் கார்ப்பரேஷன் ஆஃப் மலேசியா (பி.எஸ்.எம்.), அதன் தொழில்நுட்ப ஆலோசகர்கள் மற்றும் குத்தகையாளர்கள் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அதனை சீர் செய்ய முடியும் என நம்பிக்கைக் கொண்டுள்ளனர் என்று  அவர் கூறினார்.

திடலை மேம்படுத்துவதில் காணக்கூடிய நேர்மறையான வளர்ச்சியின் அடிப்படையில் இறுதிப் போட்டியை தேசிய அரங்கில் தொடர்ந்து நடத்த  அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்  என்று அவர் சொன்னார்.

ஹரிமாவ் மலாயா குழுவின் தலைமை பயிற்சியாளர் கிம் பான் கோன் திடலை நேரடியாக  தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து  அதைப் பயன்படுத்த முடியும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், தனது அணியின் கவனம் திசை திருப்பாத வகையில்  இறுதிப் போட்டி தேசிய அரங்கில்  நடத்தப்படுவது  நல்லது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார் என நூர் அஸ்மான் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை புக்கிட்  ஜாலில் அரங்கில் ஹரிமாவ் மலாயா மற்றும்  இந்தியா இடையே நடைபெற்ற  போட்டியின் போது மைதானத்தில் பதிக்கப்பட்டிருந்த புதிய ஜியோன் ஜோசியா வகை புல் சில பகுதிகளில் வேரோடு பெயர்ந்தன. இது குறித்து
இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த ஆட்டத்தில் இந்தியா மலேசியாவிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.


Pengarang :