NATIONAL

இஸ்ரேலின் கோரத் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் வல்லரசுகள்- அன்வார் சாடல்

ஷா ஆலம், அக் 16- பாலஸ்தீனத்திற்கு எதிராக இம்மாதம் தொடக்கம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரத் தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லரசுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடினார்.

கசப்பான மற்றும் இருண்ட அத்தியாயத்தை உலகம் தொடர்ந்து கண்டு வருவதாகக் கூறிய அவர், மனிதர்களில் இவ்வளவு கொடூரமான கும்பல்களும் உருவாகும் என்பதை தனது அரசியல்  பயணத்தில் இதுவரை எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று சொன்னார்.

தாக்குதல் தொடர்ந்து நடத்தப் படுவதோடு அத்தாக்குதல் நடப்பதை சுதந்திரம், ஜனநாயகம், தாராளமயம் பற்றி பேசும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து அனுமதிக்கின்றன. இது மிகவும் குழப்பமாக இருக்கிறது. இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மனசாட்சியையும் உலுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இன்று காலை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தணிப்பதற்கான வழிவகைகளை ஆராய தாம் வட்டார நாடுகள் உலக இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹாமாஸ் படையினர் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாகத் தீவிரத் தாக்குதலைத் தொடக்கினர். இத்தாக்குதலின் போது இடைவிடாத ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது பாய்ச்சப்பட்டது.


Pengarang :