NATIONAL

சந்தை நிலவரத்திற்கேற்ப கோழி, முட்டை விலை நிர்ணயம் ஏன்? பிரதமர் விளக்கம்

கோலாலம்பூர், அக் 17- உதவித் தொகை அனுகூலங்களை அந்நிய
பிரஜைகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் அல்லாமல் தகுதி வாய்ந்த
உள்நாட்டினர் மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனும் நோக்கில் கோழி
மற்றும் முட்டையின் விலையை சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்க
அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கோழி மற்றும் முட்டையின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக
அரசாங்கம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 370 கோடி வெள்ளியை உதவித்
தொகையாக வழங்கியது என்றும் அவர் சொன்னார்.

இந்த உதவித் தொகை மூலம் கிடைத்த அனுகூலங்களை ஏறக்குறைய 35
லட்சம் அந்நிய நாட்டினரும் 10 விழுக்காட்டு பெரும் பணக்காரர்களும்
பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.

தற்போது சந்தை விலை உச்சவரம்பு விலையை விட குறைவாகவும்
தாய்லாந்தில் மலேசியாவை விட குறைந்த விலையிலும் கோழி மற்றும்
முட்டை கிடைக்கும் காரணத்தால் அந்த உணவு மூலப் பொருள்களுக்கான
விலையை தேவை மற்றும் கையிருப்பின் அடிப்படையில் நிர்ணயிக்க
முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.

சந்தையில் கோழி மற்றும் முட்டைக்கு பற்றாக்குறை நிலவினால்
கையிருப்பிலிருந்து நாம் அதனை ஈடு செய்வோம். விவசாய மற்றும்
உணவு உத்தரவாத அமைச்சு 30 விழுக்காட்டு கோழி மற்றும் முட்டையை
கையிருப்பில் வைத்துள்ளது. அவசியம் ஏற்பட்டால் தாய்லாந்திலிருந்து
அந்த உணவுப் பொருள்களை வாங்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சரை
நான் பணித்துள்ளேன் என்றார் அவர்.

மக்களவையில் இன்று உலு திரங்கானு தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர்
டத்தோ ரோசோல் வாஹிட் எழுப்பிய துணைக் கேள்விக்கு
பதிலளிக்கையில் நிதியமைச்சருமான அன்வார் இதனைத் தெரிவித்தார்.

பாசீர் மாஸ் உறுப்பினர் அகமது பாட்லி ஷாஹ்ரி எழுப்பிய மற்றொரு
துணைக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், கோழி மற்றும் முட்டையின்
விலையை நிர்ணயிப்பதில் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக
தாய்லாந்து உள்பட வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு கோழி வளர்ப்புச்
சந்தையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றன என்று சொன்னார்.


Pengarang :