SELANGOR

தீபாவளியை முன்னிட்டு புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 400 பற்றுச்சீட்டுகள் விநியோகம்- தீபன் தகவல்

ஷா ஆலம், அக் 19- அடுத்த மாதம் 12ஆம் தேதி
கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட்
மெலாத்தி தொகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள 400 பேருக்கு பெருநாள் கால
ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கான விண்ணப்ப பாரங்களை
கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பெற்றுக்
கொள்ளலாம் என்று கெஅடிலான் கட்சியின் புக்கிட் மெலாவத்தி தொகுதித்
தலைவர் தீபன் சுப்பிரமணியம் கூறினார்.

ஒவ்வோராண்டும் தீபாவளி பண்டிகையின் போது வசதி குறைந்தவர்களின்
சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த பெருநாள் காலப் பற்றுச்
சீட்டுகளை மாநில அரசு வழங்கி வருகிறது. புக்கிட் மெலாவத்தி தொகுதி
இம்முறை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வசம் இல்லாத
நிலையில் பற்றுச் சீட்டுகளுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது? இதற்கான
நிபந்தனைகள் யாவை? என்ற குழப்பம் பொது மக்கள் மத்தியில் நிலவி
வருவதாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் நேற்று தொடங்கி இந்த பற்றுச் சீட்டுகளுக்கான
விண்ணப்ப பாரங்கள் கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி
அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்றன. தகுதி உள்ள
விண்ணப்பதாரர்கள் இந்த பாரங்களை பூர்த்தி செய்து இன்று தொடங்கி
வரும் 22ஆம் தேதிக்குள் தொகுதி அலுவலகத்தில சமர்ப்பிக்கலாம் என்றார்
அவர்.

இம்முறை இந்த பற்றுச் சீட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இந்திய
குடும்பங்களுக்குச் போய் சேர்வதை உறுதி செய்வதற்காக சில
விதிமுறைகள் அமல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த
பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் போது, பொது மக்களில் பலர்
“நாங்களும் வாக்காளர்கள், நாங்களும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறோம். எங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை“ என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இது போன்ற பிரச்சனைகள் எழாமலிருப்பதை உறுதி செய்ய இம்முறை
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட 400 குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரில்
சென்று பற்றுச் சீட்டுகளை வழங்கவிருக்கிறோம் என்று அவர்
தெரிவித்தார்.

இந்த விண்ணப்பாரங்களை பொது மக்களிடம் விநியோகிக்கும் பணியை
நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள், பொது
இயக்கங்களின் பொறுப்பார்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர்
மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை தாங்கள் வழங்கியுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :