NATIONAL

மலேசியாவுக்கு 170,000 மெட்ரிக் டன் பச்சரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய இணக்கம்

கோலாலம்பூர், அக் 20- இரு நாடுகளுக்குமிடையிலான பிரத்தியேக
நட்புறவின் அடையாளமாக மலேசியாவுக்கு 170,000 மெட்ரிக் டன் பாஸ்மதி
அல்லாத பச்சரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான அணுக்கமான
ஒத்துழைப்பின் அடையாளமாகவும் உள்நாட்டு உணவு உத்தரவாதத்தை
பாதுகாக்கும் நட்பு நாடுகளின் முயற்சிகளுக்கு இந்தியாவின்
தொடர்ச்சியான ஆதரவைப் புலப்படுத்தும் வகையிலும் இந்த அனுமதி
வழங்கப்படுவதாக கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியது.

மலேசியாவுக்கு பச்சரிசியைப் பிரத்தியேகமாக வழங்க இந்தியா ஒப்புக்
கொண்ட தகவலை இந்தியா வெளியுறவு அமைச்சர் டாக்டர்
எஸ்.ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக மலேசியா வெளியுறவு
அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காடீரிடம் கடந்த புதன்
கிழமை தெரிவித்ததாக தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

விநியோகப் பற்றாக்குறை நிலவி வரும் நடப்புச் சூழலில் மலேசிய
மக்களுக்கு இந்திய அரசாங்கம் காட்டிய ஆதரவுக்கு தாம் நன்றி
தெரிவித்துக் கொள்வதாக ஜாம்ரி கூறினார்.

பருவநிலை மாற்றம் மற்றும் இந்தியா போன்ற பிரதான அரசி உற்பத்தி
நாடுகள் அந்த உணவுப் பொருளின் ஏற்றுமதிக்கு விதித்த தடை உள்ளிட்ட
காரணங்களால் மலேசியா கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரிசி
பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகிறது.

சந்தையில் போதுமான அரிசி கையிருப்பு இருப்பதையும் அது நியாயமான
விலையில் விற்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான ஆக்ககரமான
நடவடிக்கைளை மலேசிய அரசாங்கம் எடுத்து வருகிறது.


Pengarang :