NATIONAL

சிப்ஸ் மாநாட்டில் சாதனை-  ஆறு மணி நேரத்தில் வெ.150 கோடி விற்பனை இலக்கு எட்டப்பட்டது

ஷா ஆலம், அக் 20 – நான்கு நாள் சிலாங்கூர் அனைத்துலக உச்சநிலை   மாநாடு (சிப்ஸ்) அதன் இலக்கான 150 கோடி வெள்ளி  மதிப்பிலான  பேச்சுவார்த்தை சாத்திய விற்பனையை வெறும் ஆறு மணி நேரத்தில்  எட்டியுள்ளது.

மாநிலத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் இங்கு கிளைகளை நிறுவ விரும்பும் புதிய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இந்த விற்பனை பதிவு செய்யப்பட்டது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மாநாட்டின் நான்கு நாட்களில் 50,000 வர்த்தக பார்வையாளர்களை  கவரும் இலக்கைத் தாண்டிவிட முடியும் என்று  நம்பிக்கைத் தெரிவித்த அவர்,  இம்மாநாட்டில் கலந்து கொள்ள  ஏற்கனவே 18,000 பேர் பதிவு செய்துள்ளனர் என்றார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை உச்ச நிலை மாநாட்டின் முடிவில் 150 கோடி வெள்ளி வர்த்தக இலக்கை அடைய முடியும் என்று தாம்  உறுதியாக நம்புவதாக அமிருடின் நேற்று மாலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வழி நேற்று காலை வரை  மட்டும் 120 கோடி  வெள்ளி மதிப்பிலான விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த உச்சநிலை மாநாடு இம்மாதம் 19 தொடங்கி 22 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து மிகப் பெரிய அளவில் நடத்தப்படும் மாநாடாக இந்த சிப்ஸ் 2023 மாநாடு விளங்குகிறது.

உச்சநிலை மாநாட்டில் 1,000 க்கும் மேற்பட்ட கண்காட்சிகூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  சிலாங்கூர் அனைத்துலக  சமையல் விழா, சிலாங்கூர் அனைத்துலக காபி வாரம், சிலாங்கூர் சர்வதேச சுகாதார மாநாடு உள்ளிட்ட பல  நிகழ்வுகளை ஒரே நேரத்தில் நடத்துகிறது.

இதற்கிடையில், சிலாங்கூர் இப்போது ஒரு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து சீர்திருத்தங்களின் உண்மையான உணர்வை வெளிப்படுத்துவதால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என்று அமிருடின் கூறினார்.


Pengarang :