NATIONAL

திறன்மிக்க மனித ஆற்றல் உருவாக்கம் மீது திவேட் திட்டம் கவனம் செலுத்த வேண்டும்- மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், அக் 27- அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில்
திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் கல்வித்
திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 680 கோடி வெள்ளி நிதியின்
மூலம் உயர் திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதில் கவனம்
செலுத்த முடியும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத்
தெரிவித்துள்ளார்.

உயர் தாக்கம் கொண்ட மின்னியல், மின்னணுவியல், இரசாயனம், மின்சார
வாகனம், வான் போக்குவரத்து மற்றும் மருந்தக துறைகளுக்கு மேலும்
ஆக்கத் திறனளிப்பதற்கு 2030 புதிய தொழிலியல் பெருந்திட்டம் துணை
புரியும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

புதிய தொழிலியல் பெருந்திட்டத்தில் இலக்காக கொள்ளப்பட்ட
தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் கல்விக் கூடங்களுக்கு அந்த 680
கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்படும் எனத் தாம் நம்புவதாக அவர் மேலும்
சொன்னார்.

வான் போக்குவரத்து, மருந்தகத் துறை, உணவு மற்றும் பானத் தயாரிப்பு,
மருத்துவ உபகரணத் உற்பத்தி ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தில்
உற்பத்தித் துறையை சார்ந்தவையாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி மாத வருமானத்தை 4,510
வெள்ளியாக உயர்த்துவது மற்றும் உயர் திறன் கொண்ட வேலை
வாய்ப்பை உருவாக்குவது ஆகிய இலக்குகளை அடைவதற்கு ஏதுவாக
திவேட் செயல்குழு மற்றும் மாநில அரசுக்கிடையே ஒருங்கிணைப்பு
உருவாக்கப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களவையில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா
மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சிலாங்கூர்
மந்திரி பெசாருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :