NATIONAL

அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை மித்ரா கண்காணிக்கும்- டத்தோ ரமணன்

கோலாலம்பூர், அக் 27- மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்றப் பிரிவினால் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும்  நிதி முறையாக செலவிடப்படுவது கண்காணிக்கப்படும் என்று அதன் சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

இந்திய சமுதாய உருமாற்ற திட்டங்களுக்காக மித்ராவின் கீழ் 10 கோடி வெள்ளியை  பிரமதர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கினார்.

இந்நிதியின் கீழ் மித்ரா பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக அரசு சாரா அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை மேற்கொள்ள  3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த 3 கோடி வெள்ளி நிதிக்கு 2,373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 7 கோடியே 73 லட்சம் வெள்ளியாகும்.

விண்ணப்பதாரர்களில் 353 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு
183  பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த விண்ணப்பங்களின் மொத்த மதிப்பு 2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியாகும்.

முதல் கட்டமாக 118 விண்ணப்பங்களுக்கான நிதி நேரடியாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று டத்தோ ரமணன் கூறினார்.

எஞ்சிய நிதி விரைவில் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இதில் எந்த ஒளிவு மறைவும் இன்றி அனைத்தும் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும்  வகையில் நிதி பெறும் அமைப்புகளின் பெயரும் மித்ரா அகப்பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

அதே வேளையில் நிதி பெற்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தமது தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.

வரும் காலங்களில் அமைப்புகள் வாயிலாக  அல்லாமல் நேரடியாக மக்களை சென்றடையும் திட்டங்களை மித்ரா மேற்கொள்ளும். இதற்கான நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று டத்தோ ரமணன் கூறினார்.


Pengarang :